Thursday, November 17, 2011

சிறீலங்காவும், மேற்குலகமும் அரங்கேற்றப்போகும் அடுத்த நாடகம் என்ன?-(அருஷ்)

நவம்பர் மாதம் தமிழீழ மக்களின் வாழ்விலும், சரித்திரத்திலும் ஒரு புனிதமான மாதமாகும். தமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களை உலகத்தமிழினம் நினைவு கூர்வதுடன், வென்றெடுக்கப்பட வேண்டிய விடுதலையை நோக்கிய தமது பயணத்தையும் அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழீழத் தாயகப் பிரதேசம் முழுவதும் சிறீலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதால், மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் சமூகத்தையே சார்ந்தது. எந்த ஒரு விடுதலைப் போரும் இரு பரிமாணங்களை கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றயது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தில் நிகழும் போர் என குறிப்பிடுவது.
* சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரச்சாரங்கள்.
* சிறீலங்கா அரசின் பொய்பிரச்சாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்டும் எதிர்ப்பிரச்சாரங்கள்.
* சர்வதேசத்தில் எமது விடுதலைப் போருக்காக திரட்டப்படும் ஆதரவுகள்.
* சர்வதேச நாடுகள் எமது விடுதலைப்போரை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை இனங்காணுதல்.
என ஏறத்தாழ களத்தில் நிகழ்ந்த போரின் வீச்சிற்கு இணையான வீச்சை கொண்டது தான் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள். இந்தச் சமரை எதிர்கொள்ள எமக்குப் பலமான ஊடகத்துறையும், சர்வதேச ஊடகத்துறையுடனான சிநேகபூர்வ உறவுகளும், ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மிகப்பெரும் இனப்படுகொலையுடன் தமிழ் மக்களின் ஆயுதப்போரை நசுக்கிய சிறீலங்கா அரசு, தற்போது தனது கவனத்தை குவித்திருப்பது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் தேசங்களை நோக்கியே. பலமான ஊடுருவல்களுடன் சிறீலங்கா அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி களமிறங்கியுள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பல பின்னடைவுகளைச் சந்தித்துவருகின்றது. ஆனாலும் அதனை முறியடித்து மீண்டும் முன்னோக்கி நகரவேண்டிய கடமையில் இருந்து நாம் தவறிவிட முடியாது. சிறீலங்கா அரச தலைவர்கள் மற்றும் அதன் படைத்தளபதிகள் மீது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இருந்தும் சிறீலங்கா அரசு தப்பிப்பிழைத்துள்ளது. அதற்கு சிறீலங்கா அரசுக்கு உறுதுணையாக இருந்தது இராஜதந்திர அந்தஸ்த்து என்ற ஆட்சி அதிகாரமே. தமிழ் மக்களின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு அனைத்துலக சமூகமும் அதனையே பயன்படுத்தி வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா அரசை அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டபோதும், 54 நாடுகளை கொண்ட அமைப்பின் பெரும்பாலான நாடுகள் அதனை உதாசீனப்படுத்தியுள்ளன. இந்தியா வழமைபோல மௌனம் காத்துள்ளது. கனடாவும், பிரித்தானியாவும் சிறீலங்காவில் 2013 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தபோதும், அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவுகள் கிடைக்கவில்லை.
ஒரு அங்கத்துவ நாட்டை அமைப்பில் இருந்து இடைநிறுத்துவது நடைபெறாத ஒன்று அல்ல. முன்னர் பாகிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன. 2007 ஆம் ஆண்டு உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற கூட்டத்தொடரிலேயே பாகிஸ்தானை இடைநிறுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டதில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
கிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியமை, அவசரகாலச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியமை, ஊடகங்கள் மீதான அழுத்தங்களை மேற்கொண்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் மீதான தீர்மானம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது. சுருக்கமாக கூறுவதானால் பொதுநலவாய நாடுகளின் அடிப்படை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறிவிட்டதாக டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார். பொதுநலவாய நாடுகளின் இந்தத் தீர்மானத்தை பாகிஸ்தானின் நெருக்கிய நண்பனான சிறீலங்காவும், மலேசியாவும் கடுமையாக எதிர்த்தபோதும் பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோலவே சிம்பாபே மீதும் 2002 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து முதலில் இடைநிறுத்தப்பட்ட சிம்பாபே பின்னர் முற்றாக நீக்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள், இன அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மிக அதிகம். அது தொடர்பாக பல ஆயிரம் ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகள் சபையினாலோ, மனித உரிமை அமைப்புக்களினாலோ அல்லது பிராந்திய அமைப்புக்களினாலேயோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.
மறுவளமாக காலத்தை இழுத்தடித்து தனது ஆட்சியை தக்கவைத்து, சிங்களக்குடியேற்றங்கள், மொழி மற்றும் இனக்கலப்புக்கள் மூலம் தமிழர்களில் தாயகக் கோட்பாடுகளை சிதைத்துவிடும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது மேற்குலகம். இந்த நோக்கங்களுக்காக சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும், இனநல்லிணக்கமும் என்ற ஆணைக்குழுவின் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக கூறிவரும் அவர்கள், கடந்த மே மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமை மாநாடுகளையும் சிறீலங்காவுக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்த்திருந்தனர்.
கடந்தவாரம் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நியூலான்ட் கூட, தாம் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் இந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிறீலங்காவின் ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை என்னவாக இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். சிறீலங்காவில் முன்னர் அமைக்கப்பட்ட ஒரு டசினுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் எந்த முடிவையும் எட்டாது காணாமல்போயிருந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் தமது பதவிக்காலம் முடியும்வரையிலும் சில ஆணைக்குழுக்களை அமைத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்றி வந்திருந்தன என்பதே வரலாறு.
2006 ஆம் ஆண்டு மூது£ரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவரே அண்மையில் ஐ.நாவின் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவைச் சேர்ந்த தருஸ்மர் என்பவர். ஆனால் சிறீலங்காவில் அன்று அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சிதைத்து வருவதாகவும், அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அது ஒரு சுயாதீன விசாரணைக்குழு அல்ல எனவும் தெரிவித்து தருஸ்மர் அதில் இருந்து விலகியிருந்தார்.
அந்த விசாரணைக்கு உறுதுணையாக அவுஸ்திரேலியாவில் இருந்து சாட்சியம் வழங்கிய ஒருவரைக் கூட வீதி விபத்து ஒன்றை ஏற்படுத்தி படுகொலை செய்வதற்கு சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்சா திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனவே அடுத்த வாரம் வெளியிடப்படும் முழுக்க முழுக்க சிறீலங்கா அரசுக்கு சார்பான அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறீலங்கா அரசை காப்பாற்றும் உத்திகள் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதனை நம்பியிருப்பதுபோல நாடகமாடி வரும் மேற்குலக சமூகம் அதன் பின்னர் என்ன செய்யப்போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வி. தமிழ் மக்கள் தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள கொள்கைக்கான அமிலச் சோதனையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை. அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் வேடம் அம்பலமாகிவிடும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது, வேறு ஒரு குழுவைக் கூட பரிந்துரை செய்யலாம் அவ்வாறு மற்றுமொரு குழு பரிந்துரை செய்யப்பட்டால் அந்த குழுவும் தனது செயற்பாட்டுக்கு பல வருடங்களை எடுத்துக்கொள்ளலாம். வழமைபோல அந்த குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக மேற்குலம் மற்றுமொரு நாடகத்தை ஆரம்பிக்கலாம்.
ஆனால் இந்த நாடகங்கள் எல்லாவற்றையும் முறியடித்து ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை அடைவேண்டும் என்றால் தமிழகத்தின் து£ய்மையான தமிழ் அரசியல் தலைவர்களின் வலுவான பிணைப்புக்கள் எமக்குத் தேவை. அதனை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை நமக்குள்ளது. அதன் மூலம் தான் மேற்குலகத்தின் தவறான அசைவுகளையும், ஏமாற்றுத்தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

 - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls