Tuesday, October 4, 2011

கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?

புதிதாகக் கற்றுக்கொள்ளும் தகவல் நினைவில் நிரந்தரமாக நிற்கவேண்டுமானால் 20 நிமிடம் இடைவேளை விட்டபிறகுதான் அடுத்ததை கற்றுக்கொள்ள செல்ல வேண்டும்.

எப்படி கற்றவை நீண்டநாட்கள் நினைவில் இருக்கின்றன என்பதை யி ழாங் என்பவர் (கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம்) ஆராய்ந்து கொண்டு வருகிறார். ஈக்களை வைத்து ஆராய்ந்து வரும்போது பிடிபி 11 என்ற ஜீனில் பிழை ஏற்படுத்தினால் ஈக்களுக்கு கற்றவை நினைவில் நிலைத்து நிற்பதில்லை என்று கண்டுபிடித்தார். இந்த ஜீன் மனிதனுக்கும் உண்டு.
வழக்கமாக ஈக்களுக்கு புதிதாக கற்றுக்கொடுத்தால் அதைத்தொடர்ந்து 15 நிமிடத்திற்கு அதற்குரிய நரம்பு செல்களில் பல ரியாக்ஷன்கள் நடை பெறுகின்றன. அவை முதல் உச்சக் கட்டத்தை அடைந்து தணிவதற்கு 15 நிமிடங்கள் ஆகின்றன. அதற்குப் பிறகுதான் ஈக்களால் அடுத்த பாடத்திற்கு தயாராக முடியும்.
ஜீனில் பிழை ஏற்பட்ட ஈக்களுக்கு ரியாக்ஷன்கள் தணிவதற்கு 40 நிமிடங்கள் பிடித்தன. அதற்குள்ளாக இன்னொரு பாடத்தை சொல்லிக்கொடுத்தால் அவற்றால் அவற்றை கற்றுக்கொள்ள முடிந்தாலும் நிரந்தர நினைவில் அது நிற்பதுமில்லை. உடனே மறந்து விடுகின்றன. ஆனால் நாற்பது நிமிட இடைவேளை விட்ட பிறகு கற்றுக்கொடுத்ததை ஜீன் பிழையுடைய ஈக்கள் வழக்கம்போல நினைவில் நிறுத்திக்கொள்கின்றன.
யி ழாங்கின் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. சயின்ஸில் ஒரு கான்செப்டை சொல்லிக்கொடுத்த பிறகு உடனேயே இன்னொரு புதிய கான்செப்டை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கக் கூடாது. அது மூளையில் பதிந்து நிலைப்படுவதற்கு ஒரு சில குழந்தைகளுக்கு 15 நிமிடங்களும் சில குழந்தைகளுக்கு 40 நிமிடங்களும் பிடிக்கலாம். இதை அனுசரித்து பாடங்களை தக்க இடைவெளி விட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் சொல்லித் தந்த கான்செப்ட் மனதில் பதிந்து விட்டதா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அடுத்த கான்செப்ட்டுக்குப் போகவேண்டும்.  இடைவேளையின்போது வேறு கைவினைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதிலும் புதிதாக எதையும் சொல்லித்தராமல் ஏற்கனவே செய்ததை மறுபடியும் நினைவு படுத்த வைக்கலாம்.
கணக்கு போன்ற பாடங்களில் புதிய கான்செப்ட் சொல்லிக் கொடுத்த பின் வீட்டுப்பாடம் செய்யச் சொல்வது நல்லது. தகுந்த இடைவேளையில் மறுபடியும் வீட்டில் செய்து பார்க்கும்போது கற்றது நன்றாக நினைவில் நிற்கிறது.
ஒரு பாடம் நடத்த ஒரு மணி நேரம் கல்லூரிகளில் தருகிறார்கள். அதில் 20 நிமிடம் புதிய கான்செப்டை சொல்லிக்கொடுக்கவும் மீதமுள்ளதை ஏற்கனவே கற்ற பழைய பாடங்களுடன் பொருத்திப் பார்க்கவும் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து உங்கள் அனுபவங்களை எனக்குத் தெரிவியுங்களேன்!

1 comments:

Thozhirkalam Channel said...

உபயோகமான தகவல்//

சிறப்பான பதிவுகளை வரவேற்கிறோம்..

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls