Saturday, October 8, 2011

நோபல் பரிசு ( இயற்பியல்,அமைதிக்கான)

Paristamil

இயற்பியல்: அமெரிக்கர்கள் மூவருக்கு நோபல் பரிசு

பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவின் சால் பெர்ல்மட்டர், அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் பிரையன் ஷுமிட், அமெரிக்காவின் ஆடம் ரீஸ் ஆகியோர் 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து நோபல் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூப்பர்நோவா என்றழைக்கப்படும் வெடிக்கும் நட்சத்திரங்களை 1990-கள் முதல் அவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். மிகத் தொலைவிலுள்ள 50 சூப்பர்நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பிரபஞ்சம் அதிக வேகத்தில் விரிவடைவதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதன் வேகம் அதிகரித்தால் பிரபஞ்சம் பனிப்பாறையாக மாறிவிடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிசுத் தொகை: பரிசுத் தொகையான ரூ.7.25 கோடியில் ஒரு பாதி சார்ல் பெர்ல்மட்டருக்கும், மீதிப் பாதி பிரையன் ஷுமிட், ஆடம் ரீஸ் ஆகியோருக்கு பகிர்ந்தும் அளிக்கப்படும்.

பெர்ல்மட்டர்: 1959-ல் அமெரிக்காவில் பிறந்த பெர்ல்மட்டர், பெர்க்லேவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சூப்பர்நோவா புவி விஞ்ஞான திட்டத்தின் தலைவராக உள்ளார்.
ஷுமிட்: 1967-ல் அமெரிக்காவில் பிறந்த ஷுமிட் ஆஸ்திரேலியாவில் வெஸ்டன் கிரீக் பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஹை-இசட் சூப்பர்நோவா ஆராய்ச்சிக்குழுவின் தலைவராக உள்ளார்.
ரீஸ்: 1969-ல் அமெரிக்காவில் பிறந்த ரீஸ் பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் வானவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி அறிவித்துவருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி இப் பரிசுகள் வழங்கப்படும்.


3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, லைபீரியாவின் அதிபர் எல்லன் ஜான்ஸன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி டவாக்குள் கர்மான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.நார்வேயில் உள்ள நோபல் பரிசு கமிட்டி, இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பெண்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடி வரும் இந்த மூன்று பெண்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டியினர் தெரிவித்துள்ளதாவது: ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே உலகில் அமைதியும், ஜனநாயகமும் ஏற்பட முடியும் என்றனர்.எல்லன் ஜான்ஸன் சர்லீப்

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லன் ஜான்ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.இவர் சிறந்த சீர்திருத்தவாதி. அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்டு வருகிறார். உள்நாட்டுப் போரால் 2003 வரை லைபீரியா பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படையினர் உதவி வருகின்றனர்.டவாக்குள் கர்மான்
யேமன் நாட்டில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவராக டவாக்குள் கர்மான் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். யேமன் அதிபர் சாலேவின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். பத்திரிகையாளரான இவர், இஸ்லா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை, அதிபர் சாலேவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.லேமா போவீ
லைபீரியாவில் போரில் ஈடுபட்டுவரும் குழுக்களுக்கு எதிராக கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பெண்களை ஒன்று திரட்டும் பணியில் லேமா போவீ ஈடுபட்டுள்ளார். 2009-ல் இவருக்கு வீரமான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls