Sunday, October 9, 2011

அடுத்த வினாடி

Paristamil

அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, இதில் நானே பெரியவன் நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை, நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.

இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தான் வணங்கிக் கொண்டிருப்பது எவளவு பெரிய முட்டாள் தனம். நாளைக்கே நாம் செத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். செத்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும், நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் செத்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள்தான்.

பின்னர் பார்த்தால் அனைவரும் அவரவர், வேலையை செய்து கொண்டிருப்பார்கள், 'அட நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது, என்னால் செய்ய முடியாத காரியங்களையும் ஜனங்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே, உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, நானில்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆம் நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம்தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்

எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, இருக்கும் காலம் வரை நன்மையை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வின் நிஜமான ருசிகளை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls