Wednesday, December 21, 2011

"தங்கிலிஸ்" வார்த்தைகளால் தடுமாறும் ஊடகங்கள்



பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.


மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இனிமேலாவது தமிழை வளர்க்காவிட்டாலும் தமிழை தமிழாக பயன்படுத்த முன்வருவார்களானால் பாராட்டப்பட வேண்டியதே.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls