Friday, May 18, 2012

காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்

ஊடகங்களே சமூக அமைப்புக்களே;
உங்கள் ஒற்றுமைதான் தாயக தமிழனை வாழவைக்கும். தமிழர்தாயகமான எங்கள் மண்ணில் வேற்றுநாட்டவன் வந்து எங்கள் பெண்களை மானபங்கப்படுத்தினான். எம்மால் தடுக்கமுடிந்ததா? இல்லை. எல்லாம் முடிந்துபோய் இன்று எங்கள் பெண்களை சீரழித்த காட்சிகளை பார்க்கிறோம். காட்சிப்பொருளாக்கிவிட்டான் சிங்களன்.
தான் செய்த கொடுமைகளை காட்சியாக்கி வைத்துள்ளான் அவன். எங்களுக்கான நீதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் இதுதானே எமக்கெல்லாம் வேண்டும்.
ஊடகங்களில் போர்க்குற்றக்காட்சிகள் குற்றத்துக்கான சாட்சிகளாய் வெளியிடப்படுகின்றன. நடந்தவைகள் தான் சாட்சியங்கள். அவற்றையே பொய்யாக்கத்துடிக்கும் இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு உலகநாட்டின் மனச்சாட்சியை உருக்கக்கூடிய சாட்சிகள் தான் இந்த காட்சிகள். வேதனையின் விளிம்பில் நின்று தான் இந்தக்காட்சிகளை பார்க்கிறோம். எங்கள் உறவுகள் இப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டார்களா? என்றெண்ணும் போதெல்லாம் இதயம் வெடிக்கிறது.
எங்களுடன் ஒன்றாய் இருந்து ஒட்டியுறவாடிய உறவுகள் இத்தனை கேவலமாய் துடிக்கதுடிக்க சீரழிக்கப்பட்டு கிடப்பதை எப்படி பார்த்து சகிக்கமுடியும். உலகம் இதற்கு நீதிவழங்கவேண்டும் என்று நாம் உரக்க குரல்கொடுக்க வேண்டும். இதைவிடுத்து சாட்சிகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை தாக்குவது எந்தவிதத்திலும் நியாயமாகமாட்டாது.
நடந்தவைகள் அனைத்தும் உண்மை நிகழ்வுகள்.அப்படி இருக்கும் போதுஎப்படி அவற்றை ஊடகங்கள் மூடி மறைக்கமுடியும்.எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?
ஊடகங்களே ஒற்றுமை தான் எங்கள் பலம். போர்முடிவடைந்து மூன்றாண்டுகளாகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. இன்று எத்தனை பெண்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது. இவற்றையெல்லாம் தடுக்க முடிந்ததா? நெடுந்தீவிலே எதுவும் அறியாத அந்த சிறுமியை சீரழித்து கல்லால் முகத்தை சிதைத்த அந்த காமுகனை என்ன செய்யமுடிந்தது உங்களால்.? வாய்வீரம் பேசமுடியாது. செயலில் காட்டவேண்டும். இன்று தமிழர்தாயகத்தில் பெண்கள் நடமாடமுடியாத அவலநிலை.

இதை உங்களால் தடுக்கமுடியுமா? பெண்களின் கர்ப்பை சூறையாட நினைக்கும் காமுகன் பணம் பதவி பார்ப்பதில்லை. அவன் வெறி வேறுவிதம். எங்கள் பெண்களுக்கு இத்தனை கொடுமைகளும் நடந்தபின்பும் நாம் இன்னும் ஒற்றுமை கொள்ளவில்லை என்றால் அர்த்தம் என்ன? எங்களுக்கும் எதிரிக்கும் வித்தியாசம் இல்லையே. ஊடகங்களே ஒற்றுமையே பலம். அதை இழந்துதானே இன்று இத்தனை அவலங்களும் நடந்தேறின. இன்னும் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் இனியும் தமிழன் அழிவான் என்பது உறுதி. ஆகவே ஊடகங்களே தமிழனுக்கு விடிவு ஒற்றுமையில் தான் உள்ளது.
வெளியாகியுள்ள போர்குற்ற ஒளிப்படங்களை வெளியிடுவதன் மூலமே உலக மனச்சாட்சியை தட்டிக்கேட்கலாம். வெண்ணைதிரண்டு வரும்போது தாளியை உடைக்கத்துடிக்கும் ஊடகங்களே உங்கள் மனச்சாட்சியையும் ஒருதரம் கேட்டுப்பாருங்கள். நியாயத்தின் வழி நின்று ஊடகதர்மத்தை காத்துநில்லுங்கள். காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்.
எமக்கான விடியலுக்காய் ஒற்றுமையாய் உழைத்திடுங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls